ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரைத் தடியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிபர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
ஆனமடுவ கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, தாக்குதல் நடத்திய அதிபர் தொடர்பாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர் கெடத்தேவ பகுதியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியாவார்.
சிறுமி முந்தைய நாள் பாடசாலைக்குச் செல்லாததால் கோபமடைந்த அதிபர், அருகில் இருந்த தடியை எடுத்து பலமுறை தாக்கியதாகக் கூறி, சிறுமியின் பெற்றோர் ஆனமடுவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதன் அடிப்படையில், ஆனமடுவ காவல் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் சஞ்சீவ பிரேமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் ஆர்.ஏ. வன்னியாராச்சி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.