இணையத்தில் நடைபெறும் நூதன மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு விசித்திரமான ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. ‘ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கினால் ரூ. 25 லட்சம் பரிசு’ என்ற விளம்பரத்தை நம்பிய ஒரு ஒப்பந்ததாரர், ஏமாற்றப்பட்டு ரூபாய் 11 இலட்சத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனேவைச் சேர்ந்த 44 வயதான ஒப்பந்ததாரர் ஒருவர், ஆன்லைனில் ஒரு விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில், “நான் தாயாவதற்கு ஒரு ஆண் தேவை. என்னைக் கர்ப்பமாக்கக்கூடிய ஒருவரைத் தேடுகிறேன். கல்வி, சாதி, அழகு முக்கியமில்லை. கர்ப்பமாக்கினால் ரூ. 25 இலட்சம் பரிசு வழங்கப்படும்” என்று ஒரு பெண் கூறியிருந்தார்.
இதை நம்பிய ஒப்பந்ததாரர், விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.
பரிசுத் தொகையைப் பெறுவதற்கான ‘சரிபார்ப்பு விதிமுறைகள்’ இருப்பதாகக் கூறி மோசடி கும்பல் பல காரணங்களைக் கூறியுள்ளது. பதிவு, சரிபார்ப்பு, ஜி.எஸ்.டி (GST) எனப் பல்வேறு காரணங்களைக் கூறி, கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் 23 ஆம் திகதி வரை சுமார் 100 பணப் பரிவர்த்தனைகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூபாய் 11 இலட்சம் பெறப்பட்டுள்ளது.
சந்தேகமடைந்த அவர், கர்ப்பமாக்கும் வேலை குறித்துக் கேள்வி எழுப்பியபோது மறுமுனையில் பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து அழைத்தபோது தொலைபேசிச் செயலிழந்துள்ளதைக் கண்ட அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்துறையில் முறைப்பாடு அளித்தார்.
சைபர் குற்றப் காவல்துறையினர் இந்தப் புகார் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பணத்தை இழந்த ஒப்பந்ததாரர் வழங்கிய தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடிக்குப் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்வதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சைபர் குற்றப் காவல்துறையினர், பொதுமக்கள் இதுபோன்ற வினோதமான ஆன்லைன் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

