இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள “அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட வரைபு” (PSTA), அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
புதிய வரைபானது பாதுகாப்புத் துறையினருக்குத் தொடர்ந்தும் எல்லையற்ற அதிகாரங்களை வழங்குகிறது. இது ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை முடக்கும் ஒரு உத்தியாக அமையும்.
1979-இல் தற்காலிகமாகக் கொண்டுவரப்பட்ட PTA இன்னும் நீடிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாதம் என்பதற்கான சரியான வரைவிலக்கணம் இன்றி பாதுகாப்புத் தரப்பினர் தமக்கு விருப்பமான அர்த்தத்தில் இதைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
வடகிழக்கில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்ட இந்தச் சட்டத்தின் கொடூரம், கொழும்பு ‘அரகலய’ போராட்டத்தின் போது தெற்கு மக்களால் உணரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய சட்டத்திலும் ஆயுதம் தாங்கிய படைகளுக்குக் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 24 மணிநேரத்திற்குள் பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், அந்த இடைவெளியில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.
ஒரு மனிதனின் நடமாடும் சுதந்திரத்தைப் பொலிஸாரே தீர்மானிக்கும் நிலை உருவாகும். புதிய சட்டத்தின் கீழ் நீதிமன்றம் பிணை வழங்க முடியுமே தவிர, ஒருவரை வழக்கிலிருந்து விடுவிக்கும் அதிகாரம் அற்றதாக நீதித்துறை மாற்றப்பட்டுள்ளதாக அவர் சாடினார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகப் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்த தற்போதைய அரசாங்கம், ஒரு வருடம் கடந்த நிலையிலும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக, பெயரளவில் சில மாற்றங்களைச் செய்து அதே அடக்குமுறை சட்டத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

