எங்கள் பூர்வீக நிலத்தைப் பறிக்காதீர்கள்: எழுவைதீவில் கடற்படைக்காகக் காணி சுவீகரிப்பு – ஜனாதிபதிக்குத் தாய் கண்ணீர் மடல்!

250617navy

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், எழுவைதீவில் கடற்படையின் தேவைக்காகப் பொதுமக்களின் பூர்வீகக் காணிகளைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தலை நில அளவைத் திணைக்களம் விடுத்துள்ளது.

ஊர்காவல்துறைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எழுவைதீவு இறங்குதுறைக்கு அருகாமையில் கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதி.

சுமார் நான்கரை பரப்புத் தனியார் காணியை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்காகக் காணி உரிமையாளர்களுக்கு நில அளவைத் திணைக்களம் எழுத்து மூலம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.

குறித்த காணியின் உரிமையாளரான தாய் ஒருவர் தனது குடும்ப அவலநிலை குறித்துக் கண்ணீர் மல்கக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

1990-ஆம் ஆண்டிலிருந்து குறித்த காணியைக் கடற்படையினர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த 30 வருடங்களாகத் தனது சொந்த வீட்டிற்குள் நுழைய முடியாமல் அக்குடும்பம் தவித்து வருகிறது.

கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், மகன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவர்களைப் பராமரிக்கத் தனது சொந்த நிலம் அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.

“எனது பூர்வீக நிலத்தைக் கடற்படையினருக்குக் கொடுக்கத் தயாரில்லை. பல அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி எனது குடும்ப நிலையை உணர்ந்து எமது நிலத்தை எமக்கே பெற்றுத்தர வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களையும், மீளக்குடியமர்வு குறித்த பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவுள்ள சூழலில், இவ்வாறான காணிச் சுவீகரிப்பு அறிவித்தல் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version