வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம மக்கள் நேற்று (20) மாலை பாரிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வீரபுர, கரிக்கட்டை மற்றும் ஹிதாயத் நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், நேற்று மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை புத்தளம் – கொழும்பு பிரதான வீதியை மறித்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வெள்ளத்தினால் உண்மையாகப் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் பெயர்கள் 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பட்டியலில் சேர்க்கப்படவில்லை. தகுதியுள்ளவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
போராட்டக்காரர்கள் வீதியை மறித்ததால், புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் ஹிதாயத் நகர் பகுதியில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. முந்தல் மற்றும் மதுரங்குளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை (22) முந்தல் பிரதேச செயலகத்திற்கு வந்து புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
பொய்யான தகவல்களை வழங்கி இந்தக் கொடுப்பனவைப் பெற முயற்சிப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. எவ்விதப் பாகுபாடும் இன்றி உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் இக்கொடுப்பனவு கிடைப்பதை உறுதி செய்வதாக அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.