கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
களனி காவல்துறையினரால் (Kelaniya Police) தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோரியே அந்த நபர் இந்த ஆபத்தான போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
சட்ட ரீதியாகத் தனக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுவதாகவும், இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மின்கம்பத்தின் உச்சியிலிருந்து வலியுறுத்தி வருகிறார்.
குறித்த நபர் மின்கம்பத்தின் மீது ஏறியுள்ளதால் அந்த வீதியூடான போக்குவரத்துப் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு காவல்துறையினர் அப்பகுதியைப் பாதுகாத்து வருகின்றனர்.
மின்கம்பத்தில் இருந்து அவரைப் பாதுகாப்பாக மீட்கும் பட்சத்தில், அவருக்குத் தேவையான உடனடி முதலுதவிகளை வழங்குவதற்காக 1990 சுவசெரிய (Suwaseriya) ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் அந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்க முயற்சி செய்து வருகின்றனர். இச்சம்பவம் காரணமாகக் காலி முகத்திடல் வீதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.