யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத் திட்டம், சூழலியல் ரீதியாகப் பாரிய அழிவை ஏற்படுத்தும் என இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) எச்சரித்துள்ளது.
இத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள். மைதானம் அமையவுள்ள பகுதியில் கண்டல் தாவரங்கள், கடல் புற்கள், உப்பளங்கள் மற்றும் வனச்சரகங்கள் உள்ளன. இவை அத்தீவின் இயற்கைச் சமநிலையைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கடலோரப் பாதுகாப்பு மற்றும் வள முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) முறையான அனுமதிகளைப் பெறவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மண்டைதீவு ஒரு இயற்கை வெள்ளத் தடுப்பு வலயமாகும். மழைக்காலங்களில் நீரில் மூழ்கும் இப்பகுதியில் பாரிய கட்டுமானங்களை மேற்கொள்வது பாரிய நிதி விரயத்திற்கு வழிவகுக்கும்.
இத்திட்டம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்குத் தவறான தகவல்கள் வழங்கப்பட்டு, இலங்கையின் நிலையான அபிவிருத்திக் கொள்கை மீறப்பட்டுள்ளதாக சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
“எங்கள் எதிர்ப்பு யாழ்ப்பாணத்தில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு எதிரானது அல்ல. மாறாக, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியில் சட்டங்களை மீறி இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு மட்டுமே,” என WNPS தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

