சமூக வலைத்தளங்களில் பரவிய பெண்ணொருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் கொடூரமான காணொளிச் சம்பவம் தொடர்பாக, பிரதான சந்தேக நபரான பிரபல வர்த்தகர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக வட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று வேகமாகப் பரவியது. அதில், பெண்ணொருவரை ஒரு கும்பல் முன்னிலையில் பலவந்தமாக நிர்வாணமாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தது.
கைது செய்யப்பட்டவர் பொரளை, பெயார்பீல்ட் வத்தை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒரு பிரபல வர்த்தகர். குறித்த வர்த்தகரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தனது வீட்டில் வைத்துப் பலரது முன்னிலையில் அந்தப் பணிப்பெண்ணை நிர்வாணமாக்கி, அதனைத் தனது கைத்தொலைபேசியில் காணொளி எடுத்து வட்ஸ்அப் குழுவொன்றில் பகிர்ந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியதையடுத்து, சந்தேக நபர் தலைமறைவானார். அவருக்கு எதிராகப் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
நேற்று (18) ஹிக்கடுவை பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்த போது பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இவருக்குத் தஞ்சமளிக்க உதவிய மற்றும் சாட்சியங்களை மறைக்க முயன்ற எஹலியகொட பகுதியைச் சேர்ந்த 44 மற்றும் 55 வயதுடைய இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், அவரிடம் மேலதிக வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர். இந்தப் பணியில் ஈடுபட்ட ஏனைய நபர்களையும் கைது செய்வதற்குச் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகம் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.