ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கூறப்படும் கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஆடம்பரமாகவும் வசதியாகவும் தங்கியிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, இது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தக் காணொளியில், குறித்த கைதி தனது கையடக்கத் தொலைபேசியைப் பார்த்துக் கொண்டும், போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டும் இருக்கும் காட்சி காணப்படுகிறது. அத்துடன், மற்றொரு கைதி அவருக்குத் தலையை மசாஜ் செய்யும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இந்த காணொளியில் உள்ள கைதி பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
இது குறித்து வினவியபோது, இந்தக் காணொளியில் இடம்பெறும் சம்பவம் பூஸா சிறைச்சாலையில் நடந்தது அல்ல என்று அந்தச் சிறைச்சாலையின் அத்தியட்சகர் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பில் பூஸா, காலி மற்றும் அகுணுகொலபெலஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளின் அத்தியட்சகர்களுக்கு விரைவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.