யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விஹாரை விவகாரத்திற்கு விரைவில் முறையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
இன்று தையிட்டியில் இடம்பெற்ற போராட்டம் மற்றும் கைது சம்பவங்களைத் தொடர்ந்து, எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தையிட்டி விஹாரை அமைந்துள்ள பகுதிகளில் அமைச்சின் அதிகாரிகள் தற்போது நில அளவீடுகளை முன்னெடுத்து வருகின்றனர். விஹாரைக்கு அவசியமான காணிகளைத் தவிர்ந்த, எஞ்சிய தனியார் காணிகளை அதன் உரிய உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விஹாராதிபதிக்கு வழங்கப்படுவது பௌத்த கலாசார ரீதியிலான ஒரு சான்றிதழ் மட்டுமே. இது பாடசாலைகளில் வழங்கப்படும் பதவி உயர்வு போன்றதல்ல. எனவே, இந்தச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வையும், காணிப் பிரச்சினையையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தையிட்டி பகுதியில் நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினைக்குத் தர்க்கரீதியான மற்றும் நியாயமான தீர்வினை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தையிட்டியில் தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, வேலன் சுவாமிகள் மற்றும் தியாகராசா நிரோஷ் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

