அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களை (SME) மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட கடன் திட்டங்கள் மற்றும் நிவாரண பொறிமுறைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.
10 ஆவது நாடாளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (07) பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட, ஆனால் இதுவரை பதிவு செய்யப்படாத சிறு வர்த்தகர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வங்கிகளுடன் இணைந்து வர்த்தக சமூகத்திற்கு கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் ஒவ்வொரு வர்த்தகத்தையும் பதிவு செய்யும் முறையை உருவாக்க வேண்டும்.
அனர்த்தத்திற்குப் பின் மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும்போது, அது முன்பிருந்த நிலையை விட மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உரிய காலத்தில், செயற்திறனுடன் செலவிட வேண்டும். தவறும் பட்சத்தில் எதிர்பார்க்கும் பொருளாதார இலக்குகளை அடைய முடியாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மீண்டும் தமது வாழ்வாதாரத்தைத் தொடங்குவதுடன், நாட்டின் தேசிய பொருளாதாரப் பொறிமுறைக்குள் முறைசார்ந்த வர்த்தகர்களாக அவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

