திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தூதுப் பயணத்தை நேற்று (ஏப்ரல் 13) திங்கள்கிழமை முறைப்படி தொடங்கினார். வத்திக்கானின் ஃபியூமிசினோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 9:00 மணிக்குப்புறப்பட்ட திருத்தந்தை, அல்ஜீரிய நேரப்படி காலை 10:00 மணிக்குத் தலைநகர் அல்ஜியர்ஸை வந்தடைந்தார். அங்கு அவருக்கு அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தனது பயணத்தின் தொடக்கமாக, அல்ஜியர்ஸில் உள்ள ‘மகாம் எச்சாஹித்’ தியாகிகள் நினைவிடத்திற்குச் சென்ற திருத்தந்தை, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் விசேட வாழ்த்துரையையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, எல் மௌராடியா ஜனாதிபதி மாளிகையில் அல்ஜீரியக் குடியரசுத் தலைவரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் உலக அமைதி குறித்துக் கலந்துரையாடினார். நண்பகல் வேளையில் ஜமா அல் ஜசீர் மாநாட்டு மையத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் தூதரகப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய அவர், ஆப்பிரிக்காவின் வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமை குறித்து வலியுறுத்தினார்.
பிற்பகலில் அல்ஜியர்ஸின் பெரிய மசூதியைப் பார்வையிட்ட திருத்தந்தை, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக ஒற்றுமையை வலுப்படுத்துவதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, பாப் எல் ஓயெத் பகுதியில் அமைந்துள்ள அகுஸ்தினார் மிஷனரி சகோதரிகளின் நட்புறவு மையத்திற்குத் தனிப்பட்ட முறையில் விஜயம் செய்து, அங்கிருந்தவர்களுடன் அன்பாக உரையாடினார். இது திருத்தந்தையின் எளிமையையும் மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
மாலை 5:10 மணியளவில் ‘ஆப்பிரிக்கா அன்னை பேராலயத்தில்’ திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அல்ஜீரிய மக்கள் மத்தியில் திருத்தந்தை தனது ஆசியுரையை வழங்கினார். வத்திக்கான் செய்தியாளர் இம்மானுவேல் மரியான் இது குறித்துத் தெரிவிக்கையில், திருத்தந்தையின் இந்தப் பயணம் ஆப்பிரிக்கக் கண்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.