ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனை சம்பந்தமாக எதுவுமே கூறப்படவில்லை. அத்துடன் வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் தமது கொள்கைகளை ஓரங்கட்டிவிட்டு தனது செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
எமது கொள்கைகள் என்பவை எமது மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பது தான். சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு என்பதனை தெளிவாக கூறி வந்திருக்கின்றார்கள். அதனை ஓரங்கட்டிவிட்டு அபிவிருத்தி செய்வதில் எந்த பயனுமில்லை.
தற்போது இந்த நாட்டில் பொருளாதார பின்னடைவுக்கு கொரோனா காரணமாக உள்ளது. இதனை நாங்கள் மறுக்கமுடியாது. முக்கியமாக எமது மக்களின் இனப் பிரச்சனையும்.
அதனால் ஏற்பட்ட யுத்தம் மற்றும் இழப்புக்களும் எமது பிரச்சனைக்குத் தீர்வை எட்டாது நாடு நிலைபேறான அபிவிருத்தியை அடைய முடியாது. எனவே நியாயமான தீர்வைக் காணுவதை தான் முக்கியமானதாக கொள்ளவேண்டும்.
ஜனாதிபதியின் உரையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானம் மலர்ந்ததாக கூறியிருந்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது உண்மை. ஆனால் சமாதானம் மலரவில்லை.
யுத்தம் முடிந்தாலும் காணிகள் அதே நிலையில் தான் உள்ளன. அந்த காணிகளுக்கு சரியான தீர்வு கொண்டுவராமல் சமாதானம் மலர்ந்ததாக கூறமுடியாது.
யுத்தம் மிகப்பெரிய அழிவை எமது பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய பாரிய அபிவிருத்திகளை எமது பகுதிகளில் செய்யவேண்டியுள்ளது. இதனை கொழும்பில் இருந்து திட்டமிடுவதன் மூலம் அவ் அபிவிருத்தி எமது மக்களுக்கு பயனைப் பெற்றுக் கொடுக்க முடியாது.
முக்கியமாக அந்த மக்களின் பங்களிப்புடனும் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளுடனும் அங்கிருக்கின்ற நிலைமைகளை புரிந்து செயற்பட வேண்டும்.
ஆகவே தான் எங்களுடைய பகுதிகளில் எமது மக்கள் தங்களின் அலுவல்களை தாங்களே பார்க்ககூடிய அளவிலான சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வுதான் இன்று இருக்கக்கூடிய ஒன்று.
இலங்கையின் அரசமைப்பில் 13ஆம் திருத்தச் சட்டம் உள்ளது. அது இலங்கை – இந்திய உடன்படிக்கையூடாக ஏற்படுத்தப்பட்டது. இந்த நாட்டில் உள்ள அரசியல் அமைப்பில் உள்ள விடயத்தை முழுமையாக அமுல்படுத்தாமலும் அமுல்படுத்த தயங்கும் ஒன்றாகவும் இருக்கும் நாடு இலங்கையாகத்தான் இருக்கும்.
13ஆம் திருத்ததில் எமது பிரச்சனைகளுக்கான தீர்வு இல்லாவிட்டாலும் நாங்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வதற்கான நியாயம் இதில் இருக்கின்ற பல விடயங்களை மத்திய அரசு மீளப்பெற்று வருகின்றது.
வைத்தியசாலைகளை தேசிய வைத்தியசாலைகளாகவும் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகவும் மத்தியரசுக்கு கீழ் கொண்டுசெல்கின்றது. அத்துடன் 13ஆம் திருத்தத்தை முழுமையாக அகற்றுவதற்கு அரசில் உள்ள பல சிங்களத் தலைவர்கள் விரும்புகின்றார்கள் என்பது எங்களுக்கு புரிகின்றது.
இதனால் தான் நாங்கள் 13ஆம் திருத்தத்தின் பங்காளியான இந்தியாவை கேட்கின்றோம். ஓப்பந்தத்தை தயாரிக்கும் போது கூட இது எமக்கான தீர்வாக அமையாது என வலியுறுத்தியிருந்தோம்.
13ஆம் திருத்தம் முழுமையாக இல்லாது செய்யப்பட்டால் நாங்கள் மீண்டும் பூச்சிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
முழுமையான சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு வரும் வரைக்கும் 13ஆம் திருத்தம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியாயை கேட்பதற்கு நாட்டை ஆண்ட ஆழுகின்ற அரசுகள் தான் காரணம்.
இந்த அரசை பொறுத்தவரைக்கும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகவும் கடுமையாக உழைத்து வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் 85 வீதமான மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.
இதன் மூலம் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதுடன் மரணங்களையும் கட்டுப்படுத்தியுள்ளது. இதற்காக இந்த அரசுக்கு பராட்டுக்கள்.
அதேபோல புதிய அரசியல் அமைப்பையும் கொண்டு வருவதன் மூலம் எமக்காக பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் முயற்சிக்க வேண்டும். அவரது உரையில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான எவ்விதமான செயற்பாடுகளும் காணப்படவில்லை.
ஆகவே சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டில் நிரந்தர அமைதியையும் நிலைபேறான அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியும் – என்றார்.
#SriLankaNews