திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களேயான சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
இரவு குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டுத் தாயார் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்து சிசுவைப் பார்த்தபோது அது உயிரிழந்த நிலையில் இருந்துள்ளது. இதுவே ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இறந்த சிசுவைப் பரிசோதித்தபோது, அதன் பெற்றோர், சிசுவை ‘எக்கோ’ பரிசோதனைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு வருமாறு மருத்துவர்கள் முன்னர் தமக்குக் கூறியிருந்தாகக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
சிசுவின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய முற்பட்டபோது அதனை மீட்ட சீனக்குடா காவல்துறையினர், சிசுவின் உடலைத் திருகோணமலைப் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர். சிசுவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகச் சீனக்குடா காவல்துறையினர் தெரிவித்தனர்.