தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணப்பட்ட பாரிய தவறுகள் தொடர்பில், கல்வி அமைச்சராகப் பதவி வகிக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவே பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பதவி விலகியுள்ளமையைச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, விசாரணைக் குழுவின் தலைவரை நியமித்தவர் பிரதமர் என்பதால், அதன் தோல்வி மற்றும் பாடப்புத்தகத் தவறுகளுக்கு அவரே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். ஒரு கீழ்நிலை அதிகாரி பதவி விலகுவது தீர்வாகாது.
பாடப்புத்தக விவகாரம் தொடர்பாகக் கல்வி அமைச்சின் செயலாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளதை அவர் கேலி செய்துள்ளார்.
அமைச்சின் நிர்வாகத் திறமையின்மையைச் சுட்டிக்காட்டிய அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சிற்கு வெளியே உள்ள ஒருவரால் பாடப்புத்தகத்தைத் தன்னிச்சையாக அச்சிட முடியாது. இது அமைச்சிற்குள்ளேயே திட்டமிடப்பட்டு அச்சிடப்பட்டிருக்கும்போது, அது குறித்துத் திணைக்களங்களில் முறைப்பாடு செய்வது வேடிக்கையானது.
ஒரு பாடப்பரப்பு தொடர்பான முடிவுகளை ஒரு தனிநபர் தன்னிச்சையாக எடுக்க முடியாது என்றும், அமைச்சின் செயலாளரை யாரும் அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிர்வாக ரீதியான தவறுகளை மூடிமறைக்க அதிகாரிகளைப் பலிகடா ஆக்காமல், அரசியல் ரீதியான தலைமையே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.