ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் பல குறைபாடுகள் உள்ளது. கடன் மதிப்பை குறைத்து காட்டியுள்ளார் என்று கூறினார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.
அப்போது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், வேட்புமனுவில் சொத்து மற்றும் கடன் விவரங்களை தெரிவிக்கவில்லை என கூறுவது தவறு.
அனைத்து விவரங்களும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டது. எந்த தகவலையும் மறைக்கவில்லை.
ஏதேனும் விவரங்களை மறைத்திருந்தால் தான் வேட்புமனுவை நிராகரிக்க முடியும். கோர்ட்டு நேரத்தை வீணடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
மிலானி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. அவரை போட்டியிடவே அனுமதித்திருக்க கூடாது. மனைவி பெயரில் உள்ள பங்களாவைப் பற்றிய தகவலை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை.
தமிழக முதல்-அமைச்சராக இருந்து பல சட்டங்களை கொண்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், வேட்புமனுவில் அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார். அதில் நீதிபதி, பன்னீர்செல்வத்தின் மனுவை ஏற்று, அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.
#IndiaNews