மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரப்படுத்தப்போவதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) இன்று (மார்ச் 10) அறிவித்துள்ளார். பென்டகனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) ஈரானுக்கு எதிரான போரின் ‘மிகவும் தீவிரமான நாளாக’ இருக்கும் என்று எச்சரித்துள்ளார். ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள், ஏவுகணைத் தளங்கள் மற்றும் கடற்படை பலத்தை முற்றாக முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் இராணுவத் திறன்கள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் ஈரான் ஏவிய ஏவுகணைகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாகவும் அமெரிக்கத் தரப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன. “ஈரான் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இந்தப் போரில் மோசமாகத் தோல்வியடைந்து வருகிறது” என்று கூறிய ஹெக்செத், ஈரான் தனது ஏவுகணைகளைச் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகிலிருந்து ஏவுவதன் மூலம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பணயம் வைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், போர் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது” என்றும், ஈரானின் இராணுவ வசதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்றும், அமெரிக்காவின் இராணுவ இலக்குகள் முழுமையாக எட்டப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என்றும் பென்டகன் உறுதியளித்துள்ளது. ஈரானிய அதிகாரிகள் நிலைகுலைந்து போய் ஒளிந்து கொண்டிருப்பதாகவும் அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள், சர்வதேச அரசியல் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற ஜனாதிபதி டிரம்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, பென்டகன் மிகத்தீவிரமான தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது, பிராந்தியத்தில் பதற்றத்தை நீடிக்கச் செய்துள்ளது. ஈரானியத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்து வரும் சூழலில், இந்த இராணுவ மோதல் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.