நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் காப்பாளர் என்ற ரீதியில் அவர் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.
ஓய்வூதியத்தை ரத்து செய்வதால் ஏற்படக்கூடிய சமூக மற்றும் அரசியல் விளைவுகள் குறித்து அவர், 1956-ஆம் ஆண்டிற்குப் பின்னரே சாதாரண மனிதர்களுக்கும் அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. ஓய்வூதியம் இல்லையெனில், அரசியல் மீண்டும் செல்வந்தர்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்களின் வசமாகிவிடும்.
தமது சொத்துக்களை விற்று மக்கள் சேவையில் ஈடுபடும் நேர்மையான அரசியல்வாதிகள், முதுமைக் காலத்தில் வாழ்வாதாரமின்றித் தவிக்கும் நிலை ஏற்படும். இது எதிர்காலத்தில் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வருவதைத் தடுக்கும்.
தன்னைப் போன்ற ஒரு சிலர் இந்த ஓய்வூதியத்தைத் தானதர்மங்களுக்குப் பயன்படுத்தினாலும், பெரும்பான்மையான முன்னாள் உறுப்பினர்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்திற்கு இதையே நம்பியுள்ளனர்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வரும் நிலையில், ஜனநாயகத்தையும் சாதாரண மக்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் ஒரு நடுநிலையான தீர்வை எட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே இந்த ஓய்வூதிய ரத்து தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கரு ஜயசூரியவின் இந்தத் தலையீடு அரசியல் தளத்தில் புதிய விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.