மல்லாவியில் இரு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்: மத போதகர் உள்ளிட்ட மூவர் அதிரடி கைது!

world 206

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – வவுனிக்குளம் பகுதியில் இரு யுவதிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் திருச்சபை ஒன்றின் போதகர் உட்பட மூவர் மல்லாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 19 மற்றும் 21 வயதுடைய இரு யுவதிகளும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சபை ஒன்றின் ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகப் போதகர் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் வவுனிக்குளம் பகுதிக்குச் சென்றுள்ளனர். கொண்டாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்ற நிலையில், குறித்த இரு யுவதிகளும் போதகர் மற்றும் மேலும் இரண்டு ஆண்களுடன் வான் ஒன்றில் வீடு திரும்பியுள்ளனர். பயணத்தின் போது, யுவதிகளுக்கு மது கலந்த ‘வைன்’ (Wine) பானத்தைப் போதகர் தரப்பினர் வழங்கியதாகத் தெரியவந்துள்ளது.

மது அருந்திய யுவதிகள் அரை மயக்க நிலையில் இருந்தபோது, வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவர்கள் வானைக் காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து போதகர் மற்றும் அவருடன் இருந்த ஏனைய இரு நபர்களும் யுவதிகள் மீது அத்துமீறிப் பாலியல் வன்புணர்வைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பின்னர் யுவதிகளை வீடுகளில் இறக்கிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட யுவதிகள் நடந்த கொடுமைகளைத் தமது பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் உடனடியாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இது குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த மல்லாவி பொலிஸார், தலைமறைவாக இருந்த போதகர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன், மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version