17 இல் நாடாளுமன்றம் கூடுகிறது?

Parliament SL 2 1

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (11) முற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம், பாதுகாப்பு காரணங்களால் இரத்து செய்யப்பட்டிருந்தாலும், எதிர்வரும் 17 ஆம் திகதி திட்டமிட்ட அடிப்படையில் நாடாளுமன்றம் கூடுமென தெரியவருகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக்கு மத்தியில், நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தினால், அது அரசியல் நெருக்கடியை மேலும் உக்கிரமடைய வைக்கும், அதேபோல புதிய பிரதரின்கீழ் அரசாங்கமொன்றை ஸ்தாபிக்காவிட்டால் அரச நிர்வாக பொறிமுறையும் ஸ்தம்பித்துவிடும். எனவே, நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைக்கமாட்டார் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

காணொளி தொழில்நுட்பம் ஊடாகவேனும் நாடாளுமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால்தான், ஆட்சி பொறுப்பேற்கப்படும் என்பதில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக நிற்கின்றது. அரநுகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் ‘கோ ஹோம் கோட்டா’ என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், கோட்டா தலைமையிலான ஆட்சியை விரும்பவில்லை.

நாடாளுமன்றத்தில் எதிரணி பக்கம் உள்ள மூன்று பிரதான கட்சிகளும், ஜனாதிபதி பதவியில் கோட்டா நீடிக்கும்வரை, இடைக்கால அரசமைக்க பச்சைக்கொடிகாட்ட மறுத்துள்ளதால், எப்படியாவது சஜித்தை இணங்க வைப்பதற்கான முயற்சிகளும் அரசியல் களத்தில் இடம்பெறுகின்றன. குறைந்தபட்சம் இடைக்கால அரசில் தீர்மான சக்தியாக இருக்கும் தேசிய நிறைவேற்று சபையிலாவது ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பு இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சுயாதீன அணிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசை நிறுவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எதிரணிகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகியதையடுத்து, அமைச்சரவையும் கலைந்துவிட்டது. எனவே, அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. எனினும், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்படலாம்.

‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ என்பது ‘அதிருப்தி’ தெரிவிக்கும் பிரேரணை என பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற விடயத்தை சபாநாயகர், கடந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை விவாதத்துக்கு -வாக்கெடுப்புக்கு வந்தால் அது நிச்சயம் நிறைவேறும். இலங்கை வரலாற்றில் இப்படியொரு பிரேரணையை எதிர்கொண்டு, அதில் தோல்வி கண்ட ஜனாதிபதி என்ற அவப்பெயர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்படும்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையால் நொந்துபோயுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை துறப்பது தொடர்பில் ஆலோசித்துவருகின்றனர். மொட்டு கட்சியின் தேசிய பட்டியலில் சபைக்கு வந்த இருவர் எம்.பி. பதவியை துறக்கும் முடிவை எடுத்துள்ளனர். மேலும் ஒருவர் பரீசிலித்துவருகின்றார்.

அதேவேளை, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் கழுகுபார்வையை செலுத்தியுள்ளன.

#SriLankaNews

Exit mobile version