வென்னப்புவ பகுதியில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான சுறா மீன்களுடன் 7 சந்தேகநபர்களைக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த அதிரடி கைது இடம்பெற்றது.
பலநாள் மீன்பிடிப் படகொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 876 கிலோ 200 கிராம் நிறையுடைய சுறா மீன் தொகுதி அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட 7 மீனவர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களும், மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்டப்பூர்வமான மேல்நடவடிக்கைகளுக்காகவும் வென்னப்புவ மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக் கடல் எல்லைக்குள் குறிப்பிட்ட வகை சுறாக்களைப் பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.