இலங்கை காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் நாடே ஒன்றாக எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த சில மாதங்களில் பாரிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடு முழுவதும் 77,824 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 77,105 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய போதைப்பொருட்களில் 1,280 கிலோகிராம் மற்றும் 956 கிராம் ஐஸ் போதைப்பொருள் , 320 கிலோகிராம் 741 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 2,341 கிலோகிராம் மற்றும் 523 கிராம் கஞ்சா, 132,561 போதை மாத்திரைகள் 155 கிலோ குஷ், 44 கிலோ ஹாஷிஷ் மற்றும் 146 கிலோ மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.
மேலும், மேலதிகமாக 5,568,583 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களில் 1,582 சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், 68 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருளுக்கு அடிமையான 1,449 நபர்கள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டு, அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.