‘டிட்வா’ சூறாவளி காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 29,649 வர்த்தக இடங்கள் மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
டிசம்பர் 16ஆம் திகதி வரை திரட்டப்பட்ட தரவுகளின்படி, 861 பாரிய அளவிலான ஏற்றுமதி தொழிற்சாலைகள், 8,664 நடுத்தர அளவிலான வர்த்தகங்கள், 12,300 சிறிய அளவிலான வர்த்தகங்கள் மற்றும் 9,844 நுண் அளவிலான வர்த்தகங்கள் சேதமடைந்துள்ளன.
அதிகளவான பாதிப்புகள் புத்தளம், கம்பஹா, கொழும்பு, கண்டி, கேகாலை, குருநாகல், திருகோணமலை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட 9,628 தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளன. பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கு 200,000 ரூபாய் கடன் மானியம் வழங்கப்படும். இந்தக் கடன்களுக்கு வெறும் 3 வீதம் (3%) என்ற மிகக் குறைந்த வட்டி வீதமே வசூலிக்கப்படும்.
ஏற்றுமதி உற்பத்தியாளர்களுக்காக மூன்று அரச வங்கிகள் ஊடாகத் துரித கடன் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை 2025 டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும். மத்திய வங்கியின் இணக்கப்பாட்டுடன், தனியார் வங்கிகள் ஊடான இந்தச் சலுகை வசதிகள் 2026 ஜனவரி முதல் வழங்கப்படும்.
அமைச்சில் பதிவு செய்யப்படாத ஏனைய 20,223 வணிக நிறுவனங்களுக்கு, அந்தந்த துறை சார்ந்த அமைச்சுகள் ஊடாக விசேட உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.