நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல் மறைக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) சபையில் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், ஊழியர் ஆலோசனைக் குழு இன்று கூடி இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவுள்ள நிலையில், இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த விசாரணை அறிக்கை வழங்கப்படவில்லை.
பாலியல் துன்புறுத்தல் போன்ற உணர்வுப்பூர்வமான விடயங்கள் அடங்கிய அறிக்கையை உறுப்பினர்கள் முழுமையாகப் படித்துப் பார்த்தால் மட்டுமே, ஆலோசனைக் குழுவில் அது குறித்துச் சரியான முறையில் விவாதிக்க முடியும்.
இந்த அறிக்கை உறுப்பினர்களிடமிருந்து இரகசியமாக வைக்கப்படுவதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெறும் போதே அந்த அறிக்கை உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பணியாற்றும் சில பெண் ஊழியர்கள் உயர் அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசேட குழுவின் விசாரணை அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதன் வெளிப்படைத்தன்மை குறித்து எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.