வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் மாகாண அலுவலகம், குருணாகலில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்தச் சேவையின் மூலம், வடமேல் மாகாண மக்கள் இனிமேல் தேசிய அடையாள அட்டைக்காக கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திற்குப் பயணிக்கத் தேவையில்லை. குருணாகல் மாகாண அலுவலகத்திலேயே சில மணி நேரங்களில் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
காலி மற்றும் நுவரெலியாவில் ஏற்கனவே இந்தச் சேவை வெற்றிகரமாகச் செயற்படும் நிலையில், இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைத் திட்டத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அரச துறையில் விரைவான, நம்பகமான சேவைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இது மேலும் பலப்படுத்துகிறது எனவும், எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களிலும் இதுபோன்ற அலுவலகங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

