ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் ஈரானிய கப்பல்களைத் தடுக்க அமெரிக்கக் கடற்படை தயாராகி வருகிறது. இந்த அதிரடி அறிவிப்பால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் ஒரே நாளில் 7 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து, ஒரு பீப்பாய் 100 டாலருக்கும் அதிகமான விலைக்கு விற்பனையாகிறது.
திங்கட்கிழமை காலை நிலவரப்படி, பிரென்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 7.05% உயர்ந்து 101.91 டாலராகவும், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) விலை 7.86% உயர்ந்து 104.16 டாலராகவும் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையானது, ஈரானின் ஒரு நாளைக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் வரையிலான எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, இரண்டு வாரங்களாக நீடித்த தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதுடன், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இன்று (திங்கட்கிழமை) 14:00 GMT மணி முதல் ஈரானிய துறைமுகங்களுக்கான கடல்வழிப் போக்குவரத்தை முற்றுகையிடத் தொடங்கும். இருப்பினும், ஈரானியரல்லாத துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களுக்குப் பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், ஹோர்முஸ் ஜலசந்தியை அணுகும் எந்தவொரு இராணுவக் கப்பலும் போர்நிறுத்தத்தை மீறியதாகக் கருதப்பட்டு, கடுமையாகத் தாக்கப்படும் என ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மோதல் போக்கினால் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தல்கள் வரை பெட்ரோல் விலைகள் உச்சத்திலேயே இருக்கும் என டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், சவூதி அரேபியா தனது கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தின் முழுத் திறனையும் மீட்டெடுத்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

