ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தால் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காலத்தை வீணக்கடிக்காதே, நிரந்தர நியமனத்தை உடன் வழங்குங்கள், 20ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவுக்கு போதுமா? போன்ற வாசனங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டதாரிகளின் ஒரு வருட பயிற்சிகாலம் நிறைவடைந்தும் அரசு சரியான நியமனத்தை வழங்கவில்லை. செப்ரெம்பர் 3 ஆம் திகதி ஒரு வருட பயிற்சிக்காலம் முடிவடைந்த நிலையில் எமக்கான நியமனம் வழங்கப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் 20 ஆயிரம் ரூபாவைக் கொண்டு வாழ்க்கைச் செலவை நடத்த முடியாதுள்ளது.
பல்வேறு போராட்டங்களின் பின் கிடைக்கப்பெற்ற இந்த நியமனத்தை ஒரு வரப்பிரதாசமாகக் கொண்டிருந்தோம். ஆனால் அரசு எங்களை கஷ்டத்துக்குள்ளாக்கி போராட்டத்தை தொடர தள்ளியுள்ளது.
எனவே அரசு கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப செப்ரெம்பர் 3 என்ற திகதியின் படி எங்களுக்கு பயிற்சி நியமனத்தை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.