நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 3 மில்லியன் கொவிட் – 19 தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உலகில் நிலவிவரும் தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, கொவிட்-19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடொன்றுக்கு அவற்றை வழங்குமாறு வட கொரியா கோரிக்கை விடுத்துள்ளது எனவும் ஐ.நா சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொவக்ஸ் திட்டத்தின் கீழ், சீனாவில் தயாரிக்கப்பட்ட சினொவெக்ஸ் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு நன்கொடையாக வழங்கப்படவிருந்தன. இந்த நிலையிலேயே வடகொரியா மேற்படி தெரிவித்துள்ளது.
இதேவேளை. கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி வரை வடகொரியாவில் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 37 ஆயிரத்து 291 பேருக்கும் காய்ச்சல் போன்ற நோய்கள் காணப்பட்டவர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனாத் தொற்று உறுதியாகவில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் அதன் வாராந்த அறிக்கையில் கூறியுள்ளது.
உலகலாவிய ரீதியில் கொரோனாத் தொற்று ஆரம்பமாகியவுடனேயே, அதற்கெதிராக மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளை வட கொரியா அமுல்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.