இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கைக்கு எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “தற்போது, அத்தகைய அச்சுறுத்தல் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. எமது பாதுகாப்புப் படைகள் தேசியப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகின்றன. எனவே, தேசியப் பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று கூறினார்.
திட்டமிட்ட குற்றக்கும்பல் தலைவர்கள் நாட்டிற்குத் திரும்பத் திட்டமிடுவதாக வெளியான செய்திகளுக்குப் பதிலளித்த அவர், தனது முந்தைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கமளித்தார்:
“சில போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அந்தக் கடத்தல் பாதையை விட்டுவிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர் என்றும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அந்தப் பாதையை விட்டு வெளியேற விரும்புவது ஒரு நேர்மறையான விடயம்,” என்று மட்டுமே தாம் தெரிவித்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

