கல்வி மறுசீரமைப்புச் செயல்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும், திட்டமிடப்பட்ட பணிகள் அதே வேகத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்ட செயலகத்தில் நேற்று (17) கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க 23,000 புதிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தகுதியுள்ள இளைஞர்கள் தலைமைத்துவப் பண்புடன் இத்துறைக்கு வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு (Secondary Schools) அடுத்த இரண்டு மாதங்களுக்குள் டிஜிட்டல் திரைகள் மற்றும் இணைய வசதிகள் வழங்கப்படும்.
பாடசாலைக் கட்டடங்களை மட்டும் சீரமைக்காமல், மாணவர்களின் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகளையும் மேம்படுத்தப் பிரதமர் ஆலோசனை வழங்கினார். 50 மாணவர்களுக்கும் குறைவாகக் கொண்ட பாடசாலைகளின் கல்வித் தரம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.
“கல்வி மறுசீரமைப்பு என்பது பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நீண்டகாலச் செயல்பாடு. ஒரு சிறிய குழுவினர் தமது குறுகிய நோக்கங்களுக்காக முன்வைக்கும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், அதிகாரிகள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தொடர வேண்டும்,” என பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.