நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி மற்றும் சர்வதேச ரீதியிலான போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், அத்தியாவசியப் பொருட்களான பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை அதிகரிப்பதில்லை என இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இன்று (மார்ச் 23, 2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தச் சாதகமான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும், எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்காலம் வரை நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விலைகளைத் தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு முன்னணி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. இலங்கையில் அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான பால்மா மற்றும் கோதுமை மா கையிருப்பில் உள்ளதாக நிறுவனப் பிரதிநிதிகள் இதன்போது அமைச்சரிடம் உறுதிப்படுத்தினர்.
இருப்பினும், எரிபொருள் ஒதுக்கீட்டு கட்டுப்பாடுகள் (Fuel Quota) காரணமாகப் பொருட்களை நாடு முழுவதும் விநியோகிப்பதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதை அவர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இதற்குத் தீர்வாக, உணவு விநியோகத்தில் ஈடுபடும் போக்குவரத்து வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் அளவைத் துல்லியமாகக் கண்டறிய, அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘விசேட தரவு சேகரிப்புத் திட்டத்தில்’ (Data Collection Program) இணையுமாறு அமைச்சர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன் மூலம், அத்தியாவசிய உணவு விநியோகச் சங்கிலியை எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கத் தேவையான மேலதிக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றிப் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் கறுப்புச் சந்தை உருவாவதைத் தடுக்க முடியும் என வர்த்தக அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

