பல்லேகலேயில் நிசங்கவின் அதிரடி சதம்! – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ‘சூப்பர் 8’ சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்தது இலங்கை!

image 1200x800 22

டி20 உலகக் கிண்ணத் தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, இலங்கை அணி ‘சூப்பர் 8’ சுற்றுக்கு அதிகாரபூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது. பதும் நிசங்கவின் அதிரடிச் சதத்தின் உதவியுடன் இலங்கை இந்த இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த இலங்கைக்கு எதிராக, ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைக் குவித்தது. அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் (56) மற்றும் மிட்செல் மார்ஷ் (54) ஆகியோர் அரைசதம் அடித்து அணியைப் பலப்படுத்தினர். ஜிம்பாப்வேயிடம் ஏற்கனவே தோல்வியடைந்திருந்த ஆஸ்திரேலியாவிற்கு இது ‘வாழ்வா – சாவா’ போராட்டமாக அமைந்தது.

182 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கைக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது; குசல் பெரேரா 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பதும் நிசங்க மற்றும் குசல் மெண்டிஸ் (51) ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். பதும் நிசங்க வெறும் 52 பந்துகளில் தனது கன்னிச் சதத்தைப் பதிவு செய்தார். இந்த உலகக் கிண்ணத் தொடரின் முதல் சதமும் இதுவாகும்.

இலங்கை அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது. நிசங்க 100 ஓட்டங்களுடனும், பவன் ரத்நாயக்க 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை ‘குழு B’ பிரிவில் முதலிடம் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம், முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவின் அடுத்த சுற்று வாய்ப்பு மிகவும் மங்கியுள்ளது.

 

 

Exit mobile version