தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low-Pressure Area) உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து கொண்டு, இலங்கையின் வடக்குக் கரையோரத்தை அண்டியதாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதன் காரணமாக, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.