இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

10 6

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட வைத்தியர் சந்தன கஜநாயக்க எச்சரித்துள்ளார். மார்ச் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘5 ஆவது தேசிய வாய் சுகாதார ஆய்வு’ குறித்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, ஒரு நபர் ஆண்டுக்கு அதிகபட்சம் 10 கிலோ சீனியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், இலங்கையர்கள் சராசரியாக ஆண்டுக்கு 34 கிலோ சீனியைப் பயன்படுத்துகின்றனர். இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும் என்பதால், வாய் சுகாதாரத்தைப் பேணுவதில் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சீனி கலந்த தின்பண்டங்கள், இனிப்பு பானங்கள் மற்றும் தேநீரில் அதிகளவு சீனி சேர்ப்பதே இந்த ஈறு நோய்களுக்கான முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனுடன், கடந்த காலப் பொருளாதார நெருக்கடியால் பற்பசைகளின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, மக்கள் மீண்டும் பற்பொடிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பற்பொடியில் உள்ள சொரசொரப்பான தன்மை பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஊறுவிளைவிக்கும் என எச்சரித்த வைத்தியர், 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் புளோரைட் கலந்த பற்பசைகளைப் பயன்படுத்துவதை ஆரோக்கியமான மாற்றமாகக் குறிப்பிட்டார்.

ஐந்து வயது மற்றும் அதற்குட்பட்ட குழந்தைகளிடையே பற்சிதைவு 63 சதவீதமாகக் காணப்படுவது மிகுந்த கவலையளிப்பதாக வைத்தியர் சுட்டிக்காட்டினார். கடந்த பத்து ஆண்டுகளில் பற்சிதைவைக் குறைப்பதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், இந்த எண்ணிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. 1982-83 ஆம் ஆண்டுகளில் 12 வயது சிறுவர்களிடையே பற்சிதைவு 70 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த ஆய்வில் அது 30 சதவீதமாகக் குறைந்துள்ளமை நேர்மறையான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. எனினும், புதிய ஆய்வின் மூலம் தரவுகளைத் துல்லியமாகச் சேகரித்து, அடுத்தகட்டத் தீர்வுகளை முன்னெடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மார்ச் 10 முதல் நவம்பர் மாதம் வரை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் தேசிய ஆய்வின் மூலம், இலங்கையர்களின் தற்போதைய வாய் சுகாதார நிலைமை மதிப்பீடு செய்யப்படும். இந்த ஆய்வில் 10,000 பேர் மாதிரிகளாகப் பங்கேற்கவுள்ளனர். சுகாதார அமைச்சு, பொதுமக்களின் சீனி நுகர்வைக் குறைக்க ‘சீனி வரியை’ (Sugar Tax) மீளப் பலப்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான வாய் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் சீனி நுகர்வைக் கட்டுப்படுத்துவதன் மூலமே இந்த ஆரோக்கியச் சவாலை முறியடிக்க முடியும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.

 

 

Exit mobile version