இலங்கையில் 2022-ஆம் ஆண்டு நிலவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உருவான ‘அரகலய’ (மக்களின் போராட்டம்) மற்றும் அந்தப் போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நிதி ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நெலும் மாவத்தையிலுள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று (13) ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைத்த இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்த மறைமுக சக்திகள் மற்றும் நிதி வழங்கிய வெளிநாட்டு அமைப்புகள் எவை என்பது குறித்த உண்மைகள் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
“போராட்டத்தின் போர்வையில் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு உயிரைப் பலிவாங்கினார்கள். இளைஞர் கூட்டமொன்றைத் தூண்டுதலுக்கு உள்ளாக்கி அவர்களைச் சட்டச் சிக்கல்களில் சிக்க வைத்தவர்கள், இன்று அதிகாரத்தில் அமர்ந்து அரசாள்கிறார்கள்” என நாமல் ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்தைத் மறைமுகமாகச் சாடினார். முறையான விசாரணை ஒன்றின் மூலமே இந்தப் போராட்டத்தின் ‘நிஜமான சூத்திரதாரிகளை’ அடையாளம் காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரகலய காலப்பகுதியில் போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் மற்றும் அவற்றுக்குச் செலவிடப்பட்ட பெருமளவிலான பணத்தின் மூலம் வெளிநாட்டுத் தலையீடுகள் இருப்பது உறுதியாகத் தெரிவதாக அவர் சந்தேகம் வெளியிட்டார். ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் ஊடாக தணிக்கை மற்றும் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே இந்தப் பணப் பரிமாற்றங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

