இலங்கையை அண்மையில் தாக்கிய ‘டித்வா’ (Didwa) புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 500 மெட்ரிக் தொன் அரிசியை மியன்மார் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த அரிசித் தொகையை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு மியன்மாரின் யங்கோன் (Yangon) துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது.
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெரும அரிசித் தொகுதியை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மியன்மார் அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
புயல் அனர்த்தத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த அரிசி ஒரு பெரும் நிவாரணமாக அமையும். மியன்மாரிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்படவுள்ள இந்த அரிசித் தொகுதி, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால பௌத்த மற்றும் கலாசார உறவுகளின் வெளிப்பாடாக இந்த உதவி அமைந்துள்ளதாகத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெரும இதன்போது நன்றியுடன் குறிப்பிட்டார்.