யாழ்ப்பாணம், சாவகச்சேரி – தென்மராட்சி பிரதேசத்தில் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் குரங்குத் தொல்லையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் விசேட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குரங்குகளின் தொல்லையால் தமது பயிர்கள் பெருமளவில் அழிக்கப்படுவதாகச் சாவகச்சேரி கமக்காரர்கள் வழங்கிய புகாரைத் தொடர்ந்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான தனது நாடாளுமன்றப் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் இந்த உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 20 கமக்காரர்களுக்குக் குரங்குகளைச் சுட்டுக் கலைப்பதற்கான இறப்பர் துப்பாக்கிகள் (Rubber Bullet Guns) வழங்கி வைக்கப்பட்டன.
இந்தத் துப்பாக்கிகள் குரங்குகளைக் கொல்வதற்காக அன்றி, அவற்றைத் துன்புறுத்தாமல் விளைநிலங்களிலிருந்து விரட்டியடிப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் இந்த வனவிலங்கு – மனித மோதலுக்கு இது ஒரு தற்காலிகத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.