குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் கடந்த வாரம் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பாகப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையின் போதே சடலம் புதைக்கப்பட்டிருந்த இடம் அடையாளம் காணப்பட்டது.
வனவிலங்குகளுக்காகப் சட்டவிரோதமாக இடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும், சட்டச் சிக்கல்களுக்குப் பயந்து அவரது சடலத்தைக் காணியில் புதைத்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சடலத்தை மறைக்க உதவியதாகக் கருதப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்யப் பொலிஸார் வலைவீசியுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சட்டவிரோத மின்சாரக் வேலிகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது இப்பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.