ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு வந்த இலங்கைப் பெண்ணின் கோரிக்கையை ஏற்று, இலங்கை அரசாங்கம் அவரை மீட்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் கண்ணீர் மல்கக் காணொளி வெளியிட்ட அந்தப் பெண், தனது குடும்பம் எதிர்கொண்ட சோகமான சூழலை விவரித்திருந்தார்.
இவரது கணவர் இருதய நோய் காரணமாக நீண்ட காலம் அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கணவரின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்தாத காரணத்தினால், மருத்துவமனை நிர்வாகம் இவர்களது கடவுச்சீட்டுகளைப் (Passport) பிணையாக வைத்துள்ளது.
கடவுச்சீட்டு இல்லாததால் விசாக்களைப் புதுப்பிக்க முடியாமல் போயுள்ளது. அத்துடன், தங்குமிடத்திற்காக வழங்கப்பட்ட காசோலைகள் (Cheques) பணமின்றித் திரும்பியதால் அவர் மீது நிதி மோசடி வழக்குகளும் பதிவாகியுள்ளன.
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தனிப்பட்ட முறையில் பேசி நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார்.
“பாதிக்கப்பட்ட பெண் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகளுடன் இணைந்து, உரிய அரச வழிமுறைகள் ஊடாக அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன,” எனப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணுக்கு எதிராக உள்ள நிதி மற்றும் சட்ட ரீதியான பொறுப்புகள் குறித்து அதிகாரிகள் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தனக்கு நிதி உதவி தேவையில்லை என்றும், பாதுகாப்பாக நாடு திரும்ப அரசாங்கம் சட்ட ரீதியான உதவிகளைச் செய்தால் போதும் என்றும் அந்தப் பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு வெளிவிவகார அமைச்சு எடுத்துள்ள இந்தத் துரித நடவடிக்கை சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.