இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, மாணவி ஒருவர் மேடையில் முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்துக் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த பாடசாலையின் நிகழ்வின் போது மேடையேறிய மாணவி ஒருவர், தனக்கு வழங்கப்பட வேண்டிய விருது அநீதியான முறையில் மறுக்கப்பட்டதாகப் பகிரங்கமாக அறிவித்தார். ஒத்திகைகளில் கலந்துகொள்ளவில்லை என்ற காரணத்தைக் கூறித் தனது திறமைக்கான அங்கீகாரம் புறக்கணிக்கப்பட்டதாக அவர் மேடையிலேயே ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் விவாதத்தைத் தோற்றுவித்தது.
இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, பின்வருவனவற்றைத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிபரின் அறிக்கை கிடைத்தவுடன், அதனை ஆய்வு செய்து மாணவிக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதி குறித்து உரிய அறிவுறுத்தல்கள் மற்றும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதேவேளை, இந்தப் பிரச்சினை பாடசாலையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளதாகக் கருதும் அந்தப் பாடசாலையின் பழைய மாணவியர் சங்கம் (OGA), இவ்விடயத்தில் முறையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்வதில் பாடசாலை நிர்வாகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை குறித்து இந்தச் சம்பவம் சமூகத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.