இலங்கையில் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையில் நிலவும் நிருவாகச் சிக்கல்கள் காரணமாக, நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கான டொலர் வருமானம் இழக்கப்படுவதாகக் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவையில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் உரையாற்றிய அமைச்சர், வர்த்தகர்கள் சட்டபூர்வமான முறையைத் தவிர்ப்பதற்கான காரணங்களை அடுக்கினார். சட்டபூர்வமாக ஏற்றுமதி செய்ய முற்படும்போது ஏற்படும் காலதாமதம் மற்றும் அதிகாரிகளின் இலஞ்சக் கோரிக்கைகள்.
ஒரே மாணிக்கக்கல்லுக்குப் பலமுறை கட்டணம் வசூலிக்கப்படும் தற்போதைய நடைமுறை. தேசிய உற்பத்தியில் 1 முதல் 2 பில்லியன் டொலர்கள் வரை கிடைக்க வேண்டிய வருமானம், தற்போது வெறும் 200 – 300 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.
இந்தத் தொழில்துறையை ஊக்குவிக்கவும், வருமானத்தை முறைப்படுத்தவும் அமைச்சரவை புதிய தீர்மானத்தை எடுத்துள்ளது.
பெறுமதி சேர்ப்புக்காக (Value Addition) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மாணிக்கக்கற்களுக்கு, ஒரு பொதிக்கு (Parcel) ஒரே ஒரு வரி மாத்திரம் வசூலிக்கப்படும். அந்தப் பொதியில் உள்ள கற்களின் அளவு அல்லது பெறுமதி கணக்கில் கொள்ளப்படாது. இதன் மூலம் மாணிக்கக்கற்களை இலகுவாக இலங்கைக்குள் கொண்டு வர முடியும்.
இந்தத் திட்டத்திற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ள நிலையில், எதிர்வரும் புதிய ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இது சட்டமாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். இதன் மூலம் இலங்கையை உலகளாவிய மாணிக்கக்கல் வர்த்தக மையமாக மாற்ற முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.