அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர் 30) உடைந்ததால், மூதூர் பிரதேசத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி மூதூர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்தாமை காரணமாகவே அந்தப் பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நீர் மட்டம் அதிகரித்து வருவதால், கந்தளாய் வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததன் காரணமாக அனர்த்தத்திற்குள்ளான 309 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இன்று (டிசம்பர் 1) காலை வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த 309 பேரும் மூதூர் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மூதூர் கல்கந்த விகாரை வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வீதி வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகள் அங்கே வான்வழி ஊடாகவே (Airborne) இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படைக்குச் சொந்தமான படகுடன் கடலோர ரோந்துப் படகு என்பன மூதூர் பிரதேசத்தை அண்மித்த கடல் பகுதியில் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கடற்படையினர் இந்த மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.