கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு, உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகளைச் சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்யா முன்னெடுத்த பாரிய வான்வழித் தாக்குதல்களால் உக்ரைன் முழுவதும் மின்சார விநியோகம் முடங்கியுள்ளது.
சுமார் 600-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் (Drones) மற்றும் பல ஏவுகணைகளை ஏவி ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகள்: தலைநகர் கீவ் உட்பட ஒடெசா, ரிவ்னே, டெர்னோபில் மற்றும் க்மெல்னிட்ஸ்கி ஆகிய மாகாணங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.
மின்சாரக் கட்டமைப்பிற்கு மேலதிக சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், இருக்கும் மின்சாரத் தேவையைச் சமநிலைப்படுத்தவும் உக்ரைன் முழுவதும் அவசர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களின் காரணமாக மேற்கு உக்ரைனில் உள்ள பல முக்கிய நகரங்கள் முற்றிலும் இருளில் மூழ்கியுள்ளன.
பாதுகாப்புச் சூழல் சீரடைந்தவுடன், போர்க்கால அடிப்படையில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என உக்ரைனிய மின்சார சபை அறிவித்துள்ளது. குளிர்காலத்தின் உச்சத்தில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

