இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று (04) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் ரயில் நிலையத்தின் ஒரு பகுதி பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலுக்கு அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்திலேயே (Parking) இந்தத் தீப்பரவல் ஆரம்பமானது. முதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பற்றிய தீ, பின்னர் வேகமாக ஏனைய வாகனங்களுக்கும் பரவியது.
குறித்த தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பெரும் பகுதியின தீக்கிரையாகியுள்ளன.
தீ வேகமாகப் பரவி அருகிலிருந்த மரங்களைப் பற்றிக்கொண்டதுடன், இரண்டாவது நுழைவாயிலில் அமைந்திருந்த பயணச்சீட்டு விநியோகக் கவுண்டர் (Ticket Counter) முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இயந்திரம் (Engine) ஒன்றிலும் தீப்பற்றிய போதிலும், ஊழியர்களின் துரித நடவடிக்கையால் அது பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் பல மணிநேரமாகத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தீப்பரவல் இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தினால் ரயில் நிலையப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து கேரளா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.