மன்னார் அடம்பனில் 8 வயதுச் சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளிக்கு 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை! – நஷ்ட ஈடாக ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவு!

MediaFile 10

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயதுச் சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட எதிரிக்கு 8 வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் நேற்று (நவ 12) தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றம் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம். மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார்.

வழக்குத் தொடுநர் தரப்பிற்காக ஆஜரான அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன், தனது தண்டனை குறித்த சமர்ப்பணத்தில், “இக்குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்” கடுமையாக வலியுறுத்தினார். எதிர்காலத்தில் இவ்வாறான கொடூரமான குற்றங்கள் இடம்பெறாமல் தடுக்க உச்சபட்ச சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

அரச சட்டவாதியின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம். மிஹால், குற்றவாளிக்கு 8 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக 200,000/- ரூபாய் (இரண்டு இலட்சம் ரூபாய்) தண்டப்பணம் செலுத்துமாறும் கட்டளையிட்டுத் தனது தீர்ப்பை வழங்கினார்.

Exit mobile version