மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை, 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) மன்னார் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
சட்டத்தரணி எஸ். டினேசன் வழங்கிய தகவல்களின்படி, கடந்த ஆண்டு ஜனவரி 16 அன்று மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவருக்கு அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர், கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அலுவலகத்தில் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அந்தத் தடுப்புக் காவல் இன்று (02) மதியத்துடன் நிறைவடைந்தது.
இன்று மதியம் பலத்த பாதுகாப்புடன் சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆரம்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் எழுத்துப்பூர்வ அனுமதி கிடைக்காததால், ஜனவரி 12 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
பின்னர், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியிடமிருந்து 90 நாட்கள் தடுப்புக் காவலுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றது. இதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட ‘நகர்தல் பத்திரத்தின்’ (Motion) மூலம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சி.ஐ.டி.யினரின் 90 நாள் தடுப்புக் காவல் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் குறித்த சந்தேக நபரைத் தடுத்து வைத்து, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணி மற்றும் ஏனைய குற்றக் கும்பல்களுடனான தொடர்புகள் குறித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.