யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில், பல்கலைக்கழக அனுமதி (Selection) பெறாத யுவதி ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக விரிவுரைகளில் கலந்துகொண்டதுடன், விடுதியிலும் தங்கியிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீடத்தின் புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமாகின. இதன்போது கண்டியைச் சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர், முறையான அனுமதி இன்றித் தன்னை ஒரு மாணவியாகக் காட்டிக்கொண்டு பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக ஏனைய மாணவர்களுடன் இணைந்து மருத்துவ பீட விரிவுரைகளுக்கும் அவர் தடையின்றிச் சென்று வந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவப் பாட கற்கைச் செயற்பாடுகளின் போது மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தொகுதியில் 202 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில், 203 மாணவர்கள் இருப்பதைக் கண்ட பேராசிரியர்கள் குழப்பமடைந்தனர்.
இது குறித்த தீவிர பரிசீலனையின் போதே, குறித்த யுவதி பல்கலைக்கழக அனுமதி பெறாதவர் என்பதும், சக மாணவிகளுடன் இணைந்து இரண்டு மாதங்களாக விரிவுரைகளில் பங்கேற்று வந்ததும் அம்பலமானது.
விசாரணையில், குறித்த யுவதி உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை மட்டுமே பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. மருத்துவ பீடத்திற்குத் தெரிவாவதற்கான வெட்டுப்புள்ளிகளை விட இது மிகக் குறைவானதாகும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மருத்துவ பீடம் இணைந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு (UGC) அறிக்கை சமர்ப்பித்துள்ளன. ஆணைக்குழு வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, அந்த யுவதி மீது சட்ட நடவடிக்கை எடுப்பதா அல்லது மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதா என்பது தீர்மானிக்கப்படும் என மருத்துவ பீடத்தினர் தெரிவித்துள்ளனர்.

