வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘வெலியோய பிரியந்த’ மற்றும் ‘SF ஜகத்’ ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) கைது செய்துள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிஜ்வே பிளேஸ் (Ridgeway Place) வீதியில் அமைக்கப்பட்டிருந்த விசேட வீதித் தடையின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, வெள்ளவத்தை பகுதியில் உள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது. இதன்போது 3 கிலோ 16 கிராம் ஐஸ் (ICE) போதைப்பொருள், 2 தராசுகள் மற்றும் ஒரு கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் இந்த பாதாள உலகக் கும்பலின் வலையமைப்பை முறியடிக்க விசேட விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.