மத்திய கிழக்கு மோதலில் நடுநிலைமை அவசியம்: துறைமுகங்களை அனுமதிப்பது ஆபத்தானது – மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை!

24 2

மத்திய கிழக்கில் தற்போது தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இலங்கை அரசாங்கம் எவ்விதப் பக்கச்சார்பும் இன்றி மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (06) ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், இத்தகைய இக்கட்டான சூழலில் இலங்கை எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகச் செயற்பட வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் கருத்திற்கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், “நாம் எந்தப் போரிலும் ஈடுபடவில்லை. எனவே, எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகச் செயல்பட வேண்டிய தேவை நமக்கு இல்லை. ஏதோ ஒரு தரப்பிற்கு ஆதரவாக நாம் முடிவுகளை எடுத்தால், அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தெளிவாகக் கூற முடியாது. ஆனால், நிச்சயம் அது நம் நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சூழலை உருவாக்கும்,” என்று எச்சரித்தார்.

குறிப்பாக, துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு வெளிநாட்டுத் தரப்புகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அவர் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டார். “எமது துறைமுகங்களை ஏதேனும் ஒரு தரப்பிற்குப் பயன்படுத்த இடமளித்தால், மறுமுனையில் இருக்கும் தரப்பிலிருந்து நமக்கு அடி விழத்தான் செய்யும். இது நாட்டிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார். ஈரானியக் கப்பல்கள் மற்றும் பிராந்திய மோதல்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அவரது இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

மத்திய கிழக்கு மோதல்கள் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் பாதுகாப்புச் சவால்களை உருவாக்கியுள்ள நிலையில், இலங்கையின் இராஜதந்திர நகர்வுகள் மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதே அவரது கருத்தின் மையப்பொருளாக உள்ளது. ஏற்கனவே ஈரானியக் கப்பல்கள் தொடர்பான மீட்புப் பணிகள் மற்றும் துறைமுகப் பயன்பாடு குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில், முன்னாள் ஜனாதிபதியின் இந்த எச்சரிக்கை அரசியல் களத்தில் மீண்டும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

 

 

Exit mobile version