சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன ஆகியோரை எதிர்வரும் மே 12-ஆம் திகதி ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளதாக வெளியான செய்திகளை அவரது தரப்பு மறுத்துள்ளது. இது தொடர்பாக எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் தமக்கு கிடைக்கவில்லை என மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து முன்கூட்டியே கருத்துத் தெரிவிப்பது, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதற்குச் சமம் என சட்டத்தரணி மனோஜ் கமகே வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தினரை இலக்கு வைத்து இலஞ்ச ஆணைக்குழு அதீத ஆர்வம் காட்டி வருவதாகவும், அதேவேளை தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மோசடி, டொலர் முறைகேடு போன்ற பாரிய ஊழல் புகார்கள் குறித்து ஆணைக்குழு மௌனம் காப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2013-ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக 14 ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்த கொடுக்கல் வாங்கலில், 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு இணங்க, கபில சந்திரசேனவினால் மூன்று தவணைகளாக மொத்தம் 60 மில்லியன் ரூபாய் பணம் முன்னாள் ஜனாதிபதியின் பெலியத்த மற்றும் கார்டன் இல்லங்களில் வைத்து கையளிக்கப்பட்டதாக இலஞ்ச ஆணைக்குழு கடந்த மார்ச் மாதம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது. இந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே மே 12-ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இத்தகைய அரசியல் பழிவாங்கல்களுக்கு அஞ்சப்போவதில்லை எனவும், சட்டரீதியாக இதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ராஜபக்ஷ தரப்பு தெரிவித்துள்ளது.